புயலால் பெரும் பாதிப்பு.. மத்திய அரசிடம் ரூ. 5000 கோடி உதவி கேட்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Meenakshi
Dec 05, 2023,04:49 PM IST
சென்னை: மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் கோடி கேட்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிச்சாங் புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசு தரும் நிதியை பொறுத்து தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. நான்கு நாட்களில் முழு நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். ஏற்கனவே பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். ஆனால், இது வரலாறு காணாத வகையில் மழை பதிவாகியுள்ளது.

தற்போது பெய்த மழை கடந்த காலத்தை விட அதிகமாக உள்ளது. அரசின் நடவடிக்கையால் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. 9  மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பேர் நிவார முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் வெளியேற தாமதம் ஆனது.



மழை பாதிப்பை அரசியல் ஆக்க நான் விரும்பவில்லை. மழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி பொய்யான தகவல்களை கூறுகிறார். 75 சதவீத இடங்களில் பணிகள் சீரானது. மீதமுள்ள 25 சதவீதம் பணிகள் நாளைக்குள் சரிசெய்யப்படும். மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் 5000 கோடி கேட்க உள்ளோம். அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். 

சென்னையில் இயல்பு நிலைமை வெகு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களால் மக்கள் இன்னல்களுக்கு ஆளானாலும் அவர்களை அதிலிருந்து மீட்டு நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றார் அவர்.