Weekend Rush:சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல.. 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Meenakshi
Feb 09, 2024,05:57 PM IST

சென்னை: வார இறுதி நாட்களில் சென்னையில் பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று  போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 


வாரத்தின் இறுதி நாட்களாக கருதப்படும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுவும் ஒன்று, இரண்டு பேருந்துகள் கிடையாது. கிட்டதட்ட 500 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இது குறித்து போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:




பிப்ரவரி 10, 11 சனி, ஞாயிறு முகூர்த்தம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.


சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் இன்று  தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 500 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்பும் மக்களுக்காக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதியில் பயணம் மேற்கொள்ள இதுவரை 11,429 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். 


ஞாயிறு மற்றும் 11,027 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில்  அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.