சென்னை - ஹைதராபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ..50 பயணிகள் காயம்

Manjula Devi
Jan 10, 2024,11:35 AM IST

ஹைதராபாத்: சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட  பயணிகள் காயமடைந்துள்ளனர்.


சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சார்மினார் விரைவில் சென்றது.  சார்மினார் விரைவு ரயில், நம்பள்ளி ரயில் நிலையத்தில், நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் தாண்டி சென்று  தடுப்புச் சுவரியில் மோதியுள்ளது. அப்போது 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. ரயில் தடம் புரண்டதில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  நல்ல வேலையாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. 




விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது பயணிகளிடம் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.