கோவில் குளத்தில் மூழ்கி 5 புரோகிதர்கள் பலி.. சென்னையில் பரிதாபம்!
Apr 05, 2023,02:18 PM IST
சென்னை : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்வதற்காக கோவில் குளத்தில் இறங்கிய இளம் புரோகிதர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சென்னை நங்கநல்லூர் பகுதியில் நடந்துள்ளது.
தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இதுவரை தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது கிடையாது என்றும், முதல் முறையாக இப்போது தான் தீர்த்தவாரி உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உற்சவத்தின் போது இளம் புரோகிதர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் மார்ச் 26 ம் தேதி துவங்கி பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர நாளான இன்று (ஏப்ரல் 05) இக்கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல கோவில்களை சேர்ந்த புரோகிதர்கள் தர்மலிங்கேஸ்வர் ஆலயத்திற்கு வந்துள்ளனர்.
தீர்த்தவாரி உற்சவத்திற்காக 25 புரோகிதர்கள், சுவாமி உற்சவம் சிலையை தூக்கிச் சென்றுள்ளனர். அவர்களில் இருண்டு பேர் குளத்தின் ஆழமாக பகுதிக்கு சென்று சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக மேலும் 3 புரோகிதர்கள் சென்று, அவர்களும் குளத்தின் சுழலில் சிக்கிக் கொண்டனர். ஆனால் குளத்தில் 20 அடிக்கு மேல் ஆழம் இருந்ததால் அவர்கள் ஐந்து பேரும் சுழலில் இருந்து மீள முடியாமல், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பழவந்தாங்கல் பகுதி போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் மூழ்கிய 5 புரோகிதர்களின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா (24), ராகவன் (18), பானிஷ் (20), மடிப்பாக்கத்தை சேர்ந்த ராகவ் (22), கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.