லடாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு.. டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள் பலி

Meenakshi
Jun 29, 2024,05:52 PM IST

லடாக்:   லடாக்கில் ராணுவ டேங்கரில் 5 ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்று பயிற்சியில் ஈடுபட்ட போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 5 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.


வட மாநிலங்களில் சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், லடாக்கில்  கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லடாக் நியோமா- சுஷூல்  பகுதியில் வெள்ளத்தின் போது ஆற்றைக் கடப்பதற்கான பயிற்சிகள் ராணுவ வீரர்களுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதே போல வழக்கமான பயிற்சி நடைபெற்று வந்தது. 




இதற்காக டி 72 வகை ராணுவ பீரங்கியில் நேற்று மாலை 5 ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர் அதிகரித்தது. அப்போது பீரங்கியுடன் ஐந்து பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளின் உதவியோடு, ராணுவ வீரர்கள் மீட்பு படையினர் உதவியுடன் தேடலில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 5 ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் ஏற்பட்ட துரதிஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர சம்பவத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.