கிளாம்பாக்கம் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. புறநகர் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு!

Su.tha Arivalagan
Feb 25, 2024,05:33 PM IST

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு உதவும் வகையில் சென்னையிலிருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு  பேருந்து முனையத்திலிருந்துதான் தற்போது பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.


பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்து வருகிறார்கள். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் வருவதற்கு ஆகாய நடைபாலமும் அமைக்கப்படவுள்ளது.


இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு முயற்சியாக தாம்பரம் வரை செல்லும் புறநகர் ரயில்களை தற்போது கூடுவாஞ்சேரி வரை நீட்டித்துள்ளனர். அதாவது சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ஐந்து ஜோடி ரயில்கள் இனி கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். பிப்ரவரி 26ம் தேதி அதாவது நாளை முதல் இது அமலுக்கு வருவதாக சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார்.



இதன் மூலம் கிளாம்பாக்கம் பயணிகளுக்கு சற்று ஆறுதல் கிடைக்க வாய்ப்புண்டு. காரணம், தற்போது கிளாம்பாக்கத்திலிருந்து சிட்டிக்குள் வருவதற்கு முழுமையாக சாலை மார்க்கமான போக்குவரத்தைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் சாலைப் போக்குவரத்தும் ஜாம் ஆகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது வண்டலூர் - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு நடுவில் உள்ளது. ஊரப்பாக்கத்திற்கு அடுத்து வருவது கூடுவாஞ்சேரி. தற்போது கூடுவாஞ்சேரி வரை ரயில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கிளாம்பாக்கம் பயணிகள் அருகாமையில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்லும்போது அதிக நேரம் காத்திருக்காமல் துரிதமாக ரயிலைப் பிடித்து பயணித்த உதவியாக இருக்கும்.


மார்ச் வரை ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவை பாதிப்பு


இதற்கிடையே, புறநகர் ரயில் சேவையில் ஞாயிறு தோறும் பல மணி நேரங்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் ரயில்வே விளக்கியுள்ளது. பயணிகள் பாதுகாப்புக்காகவே இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. வெயில் காலத்திற்கு முன்பாகவே இந்தப்  பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதனால்தான் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.


நவீனமாகும் ரயில் நிலையங்கள்




அம்ரித் பாரத் நிலையத் திட்டம் மூலமாக சென்னையில் உள்ள திரிசூலம், குரோம்பேட்டை ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.


இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் மட்டும் 17 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படவுள்ளன. தற்போது பணிகள் முடிந்துள்ள சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுன்ட், சூலூர்பேட்டை ரயில் நிலையங்களை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.