வளைச்சு வளைச்சு சிக்கும் சிறுத்தைகள்.. இதுவரை 4.. ஜில்லிப்பில் திருப்பதி!

Su.tha Arivalagan
Aug 28, 2023,03:30 PM IST
திருப்பதி:  திருப்பதி மலைப் பாதையில் வைக்கப்பட்டுள்ள கூண்டில்  4வது முறையாக சிறுத்தை சிக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நெல்லுரை சேர்ந்த லட்சிதா என்ற ஆறு வயது சிறுமி தனது பெற்றோருடன் பாதயாத்திரை சென்றார் .அப்போது  திடீரென்று அந்த குழந்தையை காணவில்லை. இதனை  அறிந்த தேவஸ்தானம் தேடுதல் பணியில் ஈடுபட்டு, குழந்தையின் பாதி உடலை மீட்டனர். சிறுத்தை தாக்கி குழந்தை இறந்ததாக தெரிய வந்தது. இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பீதியில் உறைந்தனர்.



இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் மலைப்பாதையில் கூண்டு அமைத்தனர். இதில் சிறுமியை கடித்து குதறிய சிறுத்தை பிடிபட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக  தேவஸ்தானம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கியது. மேலும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்ள திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியது.

இதனால் திருப்பதி மலையில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் சற்று நிம்மதி அடைந்தனர் . இந்நிலையில் மறுநாள் மேலும் இரண்டு  சிறுத்தைகள் அடுத்தடுத்து சிக்கின. இதனால் தேவஸ்தானம் தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில் 16 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை (ஆகஸ்டு 28)   4வது சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் மீண்டும் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .

4 வது முறையாக சிக்கி உள்ள சிறுத்தையை பிடித்து திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். .தொடர்ந்து திருப்பதி மலையில் சிறுத்தைகள் சிக்கி வருவதால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.