பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. இந்த ஞாயிறும்.. தாம்பரம் டூ சென்னை பீச் இடையே.. 44 ரயில்கள் ரத்து!

Manjula Devi
Feb 23, 2024,09:55 PM IST

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை டூ தாம்பரம் மற்றும் தாம்பரம் டூ சென்னை கடற்கரை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும்  44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வீக் என்ட் என்றாலே சந்தோஷத்திற்கு இணையே கிடையாது. ஏனென்றால் ஞாயிறுதோறும் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், கடைகள்,பொது வளாகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை விடப்படும். அன்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வெளியில் சென்று சந்தோஷமாக விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ்வர். 


அன்றைய தினம் பொதுமக்கள் அதிகமாக வெளியில் வருவர். அப்போது போக்குவரத்து சேவை மிகவும் அத்தியாவசிய தேவையாக கருதப்படும். குறிப்பாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் மெட்ரோ ரயில் சேவை, புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சமீப மாதங்களாக, சென்னையில் பராமரிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவையில் சற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.




வரும் ஞாயிற்றுக்கிழமையும் பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தாம்பரம் டூ சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் டூ தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால் சென்னை கடற்கரை டூ தாம்பரம் மற்றும் தாம்பரம் டூ சென்னை கடற்கரை என்ற இரு மார்க்கத்திலும் செல்லும் 44 புறநகர்  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  


செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் அனைத்தும், தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே பயணிகள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


தற்போது  சென்னையில் 44  புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால்  பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் பயணிகளின் தேவைகளுக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டபோது கூடுதலாக மெட்ரோ ரயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.