என்னண்ணே சொல்றீங்க.. எலான் மஸ்க்கை பாலோ செய்பவர்களில் .. பலரும் "ஃபேக்"காம்!

Su.tha Arivalagan
Aug 21, 2023,12:19 PM IST

சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கை பாலோ செய்பவர்களில் பலரும் போலிகளாம். அதாவது கிட்டத்தட்ட 42 சதவீதம் பேர் டுபாக்கூர்களாம்.


டிவிட்டரில் ஒரிஜினல் ஐடிகளை விட இந்த ஃபேக் ஐடிகளின் புழக்கம்தான் ஜாஸ்தி. பலருக்கும் இந்த ஃபேக் ஐடிகள்தான் சூப்பராக முட்டுக் கொடுக்கிறார்கள். ஆனால் டிவிட்டர் உரிமையாளருக்கே ஃபேக் ஐடிகள்தான் பாலோயர்களாக அதிக அளவில் உள்ளனர் என்பது புதுத் தகவலாக இருக்கிறது.




எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரில் 15,32,09,283 பாலோயர்கள் உள்ளனர். அதாவது 15 கோடியே 32 லட்சத்து 9 ஆயிரத்து 283 பேர் உள்ளனர். ஆனால் இதை ஆய்வு செய்து பார்த்ததில் 42 சதவீதம் பேர் அதாவது 6.53 கோடி பேர் போலிகள் என்று தெரிய வந்துள்ளது. இந்த கணக்களுக்கு ஒரு பாலோயர் கூட கிடையாதாம். இந்தத் தகவலை மாஷபிள் என்ற இணையதளம் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது.


டிரவிஸ் பிரவுன் என்பவர் இதுதொடர்பாக சேகரித்துக் கொடுத்த தகவல்களை வைத்து இந்த ஆய்வை செய்துள்ளது மாஷபிள் இணையதளம்.  மேலும் மஸ்க்கின் பாலோயர்களில் வெறும் 4 லட்சத்து 53 ஆயிரம்பேதான் அதாவது 0.3 சதவீதம் பேர்தான் டிவிட்டர் பிரீமியத்தை சப்ஸ்கிரைப் செய்துள்ளனராம். 72 சதவீதத்திற்கும் மேலானோருக்கு சராசரியாக 10க்கும் குறைவான பாலோயர்கள்தான் உள்ளனர்.


6.25 கோடி பாலோயர்கள் ஒரு டிவீட் கூட போட்டதில்லையாம்.  10 கோடிப் பேர் சராசரியாக 10 டிவீட் வரைதான் போட்டுள்ளனராம்.


கடந்த 2022ம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து டிவிட்டரை வாங்கினார் மஸ்க். அது முதல் ஏகப்பட்ட மாற்றங்களை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது பாலோயர் குரூப்பை பெரிய போகஸ் என்பது போல செய்திகள் வெளியாகியுள்ளது அதிர வைப்பதாக உள்ளது.