41 வயது.. பாடி பில்டர் இன்ப்ளூயன்ஸர் பெண் திடீர் மரணம்.. என்ன காரணம்.. போலீஸ் விசாரணை!

Su.tha Arivalagan
Oct 21, 2023,12:20 PM IST

வெல்லிங்டன்: நியூசிலாந்தைச் சேர்ந்த பிரபலமான பிட்னஸ் இன்ப்ளூயன்ஸர் ராச்செல் சேஸ் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


நன்றாக இருப்பார்கள், கட்டுமஸ்தான உடல்வாகு இருக்கும்.. உடலில் எந்த நோயும் இருக்காது.. ஆனால் திடீரென சுருண்டு விழுந்து இறப்பார்கள்.. வயது 30, 25, 40 என்று சொல்லும்போதுதான் அத்தனை பேருக்கும் பகீரென்று இருக்கும்.. இந்த வயதில் மாரடைப்பா என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இப்படிப்பட்ட அதிர்ச்சி மரணங்கள் இப்போது அதிகரித்து விட்டன. கொரோனாவுக்குப் பின்னர் இது அதிகரித்திருப்பதாகவும் ஒரு வாதம் உள்ளது.




இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற  சம்பவங்களை நாம் இப்போது அடிக்கடி பார்த்து வருகிறோம். உ.பியில் ஒரு கல்லூரி மாணவன் உடற்பயிற்சி செய்தபோது டிரெட்மில்லில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது சென்னையில் டிரெய்னர் ஒருவர் உயிரிழந்தார். இதுபோல நிறைய நடக்கிறது.


நியூசிலாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த ராச்செல் சேஸ், 41 வயதாகும் பெண்மணி. பிட்னஸ் இன்ப்ளூயன்ஸராக இருந்து வந்தார். மிகவும் பிரபலமானவர். இவர் திடீரென மரணமடைந்திருக்கிறார். அவரது மகள் இந்த மரணச் செய்தியை அறிவித்துள்ளார்.


கணவரை விட்டுப் பிரிந்து தனது 5 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார் ராச்செல். இவருக்கு பேஸ்புக்கில் 10.4 லட்சம்  பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு பாடி பில்டரும் கூட. இவரது மோடிவேஷனல் பதிவுகள் பலரையும் கவர்ந்திழுத்தவையாகும். தனி ஒரு தாயாக இருந்து கொண்டு எப்படி இவரால் இப்படி மோடிவேஷனலாக இருக்க முடிகிறது என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள்.




தனது தாயார் குறித்து இவரது மூத்த மகள் அன்னா சேஸ் கூறுகையில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இரக்க மனம் படைத்தவர். எப்போது எங்களுக்கு அட்வைஸ் தேவைப்பட்டாலும் அவர் அங்கு இருப்பார். நிறைய இலக்குகளுடன் பயணித்து வந்தார். அவருக்கு லட்சக்கணக்கான பாலோயர்கள் இருந்ததில் ஆச்சரியம் இல்லை என்று கூறியுள்ளார்.


ராச்செலும், அவரது கணவர் கிறிஸ் சேஸும் 14 வருட தாம்பத்தியத்திற்குப் பின்னர் 2015ல் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் கிறிஸ் சேஸ், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். 


இளம் வயதிலேயே ராச்செல் பாடிபில்டிங்கில் இறங்கி விட்டார். பல போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். புகழ் பெற்ற லாஸ்வேகாஸ் பாடிபில்டிங் ஒலிம்பியா போட்டியில் கலந்து கொண்ட முதல் நியூசிலாந்து பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.