350 வாக்காளர்கள்.. ஒரே வீட்டில்.. அசரடிக்கும் அஸ்ஸாம் குடும்பம்.. வேட்பாளர்கள் குவிகிறார்கள்!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரே வீட்டில் 350 வாக்காளர்கள் உள்ளனராம். இதனால் அவர்களின் வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் அலை மோதுகிறார்கள்.
அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புலோகோரி நேபாளி பாம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1200 பேர் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 300 குடும்பங்களாக இவர்கள் கிளை பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களில் ரான் பகதூர் தாப்பா குடும்பத்தில் மட்டும் 350 வாக்காளர்கள் உள்ளனராம்.
இவர்கள் அனைவரும் ஏப்ரல் 19ம் தேதி சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக காத்துள்ளனராம். ரான் பகதூர் தாப்பாவுக்கு 12 மகன்கள், 9 மகள்கள் உள்ளனர். ரான் பகதூருக்கு மொத்தம் 5 மனைவிகள். அனைவரும் இறந்து விட்டனர். பிள்ளைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் ரான் தாப்பா. இவருக்கு பேரப் பிள்ளைகள் மட்டும் 150 பேர் உள்ளனராம் (அதாவது பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் என 150 பேராம்)
இதுகுறித்து ரான் தாப்பாவின் மகன் தில் பகதூர் தாப்பா கூறுகையில், எனது தந்தை அவரது தந்தையுடன் 1964ம் ஆண்டு அஸ்ஸாமுக்கு வந்து குடியேறினார். எனது தந்தைக்கு 5 மனைவிகள், 12 மகன்கள், 9 மகள்கள். மகன்கள் மூலம் 56 பேரப் பிள்ளைகள் உள்ளனர். மகள் வழிப் பேரப் பிள்ளைகள் குறித்த கணக்கு தெரியவில்லை. இந்தத் தேர்தலில் எங்களது குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 350 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஆனால் எங்களது வம்சாவளி குடும்பக் கணக்கை எடுத்தால் 1200 பேருக்கு மேல் வரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் நாங்கள் நன்றாகப் படித்துள்ளோம். எங்களது பிள்ளைகளும் நன்றாகப் படித்துள்ளனர். ஆனால் யாருக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலர் பெங்களூர் போய் விட்டனர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். சிலர் கூலி வேலை பார்க்கின்றனர். நான் கிராம சேவகராக பணியாற்றியுள்ளேன். எனக்கு 8 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர் என்றார்.
இவர்களது குடும்பத்தில் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.