குவைத் தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. 40க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்!
குவைத்சிட்டி: குவைத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தெற்கு குவைத்தில் உள்ள மாங்காப் என்ற இடத்தில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பெருமளவில் இந்தியத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். தமிழர்களும் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்த கட்டடத்தில்தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டுக்காரர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அதேபோல வட இந்தியர்கள் யார் என்ற விவரமும் இன்னும் வெளியாகவில்லை. தீவிபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட அந்தக் கட்டடம் முழுவதுமே தீயில் சிக்கிக் கொண்டதால் உயிரிழப்பும் அதிகமாகியுள்ளது.
இங்குள்ள சமையலறையில் தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்து தீ பரவியுள்ளது. தீவிபத்தைத் தொடர்ந்து சம்பவ குடியிருப்பில் இருந்த பலர் வெளியே ஓடி வந்து தப்பியுள்ளனர். ஆனால் பலர் மாட்டிக் கொண்டுள்ளனர். இந்தக் குடியிருப்பானது கே.ஜி. ஆப்ரகாம் என்ற மலையாளி தொழிலதிபருக்குச் சொந்தமானதாகும்.
அளவுக்கு அதிகமாக இங்கு தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனராம். இதுகுறித்து அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அதிக அளவில் தொழிலாளர்களை தங்க வைத்ததால்தான் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்:
இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குவைத்தில் நடந்த தீவிபத்து சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நமது தூதர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். மேலும் தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நமது தூதரகம் தேவையான உதவிகளைச் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.