உக்ரைனுக்கு ஆதரவாக ரூ. 4200 நன்கொடை.. 33 வயது பெண் கைது.. கண்ணைக் கட்டி கோர்ட்டில் ஆஜர்!

Su.tha Arivalagan
Feb 21, 2024,05:42 PM IST

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவாக ரூ. 4200 நன்கொடை கொடுத்ததாக ஒரு பெண்ணை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணை கைகளில் விலங்கு மாட்டி, கண்களைக் கட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


33 வயதாகும் இந்தப் பெண்ணின் பெயர் செனியா கரெலினா. அமெரிக்க - ரஷ்ய குடியுரிமை பெற்றவர். இவர் மீது தற்போது தேசதுரோக வழக்கை ரஷ்ய காவல்துறை தொடுத்துள்ளது.  உக்ரைன் நாட்டு நிறுவனமான ரேசாம் மூலமாக அந்த நாட்டின் போர் செலவுகளுக்காக ரூ. 4200 பணத்தை இவர் நன்கொடையாக செலுத்தினார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.




இதுகுறித்து ரஷ்ய பெடர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே செனியா, உக்ரைனுக்கு ஆதரவாக பணம் கொடுத்து வந்துள்ளார். உக்ரைன் நிறுவனங்கள் மூலமாக அந்த நாட்டு ராணுவத்திற்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இவர் கொடுத்த நிதியின் மூலமாக மருந்துப் பொருட்கள், ஆயுதங்கள், கருவிகள், வெடி பொருட்களை உக்ரைன் ராணுவத்தினருக்கு வாங்கியுள்ளனர். இதன் மூலம் இவர் ரஷ்யாவுக்கு துரோகம் செய்துள்ளார்.


இதுதவிர குற்றவாளி அமெரிக்காவில் இருந்தபோது உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஒரு ஸ்பா நடத்தி வருகிறார் செனியா.  இவர் மீதான வழக்கில் குறைந்தது 20 வருட சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செனியா நல்ல டான்ஸரும் கூட, பேலட் டான்ஸ் ஆடுவதில் சிறந்தவராம்.




செனியா மீதான இந்த வழக்கு குறித்து அவரது முன்னாள் மாமியார் எலியோனாரா ஸ்ரெபுரோஸ்கி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவர் அப்படிப்பட்ட பெண் இல்லை. யாருக்கும் தீங்கிழைக்காதவர்.  அவரது தந்தையும் தாயும் சமீபத்தில்தான் விவாகரத்து செய்தனர். அவர்களைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தார் செனியா.


எனது மகனும் இந்த சம்பவத்தால் வேதனை அடைந்துள்ளான். நம்மால் என்ன உதவிகளைச் செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும் என்று என்னிடம் கூறியுள்ளான். அவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்பதே எங்களது கோரிக்கையாகும் என்றார்.


ரஷ்யாவில் தற்போது தேசதுரோக வழக்குகள் அதிக அளவில் போடப்படுகின்றன. கடந்த 2023ம் ஆண்டிலிருந்து இதுவரை 63 பேர் மீது தேசதுரோக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில்,  37 பேருக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கில் கடும் சிறைத் தண்டனையை ரஷ்யா அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.