பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை.. அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி பறிபோனது!

Su.tha Arivalagan
Dec 21, 2023,07:13 PM IST

சென்னை: பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு  சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறி போய் விட்டது.


வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருவரையும் கீழ் நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் இந்த இருவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்து விசாரித்தது.


நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் சமீபத்தில் பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.




அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறி போய் விட்டது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.


இருவரும் அப்பீல் செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போன்ற வழக்குதான் பொன்முடி மீதான வழக்கும். முதல்வராக இருந்தபோதுதான் அவரும் இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அது திமுக தொடர்ந்த வழக்கு. இப்போது அதிமுக தொடர்ந்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த பொன்முடி தண்டனைக்குள்ளாகி அமைச்சர் பதவியை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொன்முடிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.