Oh My Gosh.. சினிமாவில் வருவது போல்.. பெண் நீதிபதி மீது.. டைவ் அடித்து பாய்ந்த.. கைதி!

Su.tha Arivalagan
Jan 04, 2024,06:03 PM IST

லாஸ்வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் தனது கண்காணிப்புக் காலத்தை ரத்து செய்ய மறுத்த பெண் நீதிபதி மீது ஆத்திரமடைந்த கைதி ஒருவர், சினிமாவில் வருவது போல டைவ் அடித்து அந்த நீதிபதி மீது பாய்ந்து சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர வைத்துள்ளது.


ஒரு பெரிய டேபிளையே அந்த கைதி அலேக்காக தாண்டிப் பாய்ந்தது அத்தனை பேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் கோர்ட் காவலர் ஒருவர் காயமடைந்தார். பெண் நீதிபதி பெரிய அளவில் காயமின்றி தப்பினார்.




அந்தக் கைதியின் பெயர் டெபோரா ரெட்டன். 30 வயதாகும் அவர் 3 முறை கடுமையான குற்றங்களுக்காக சிறைக்குச் சென்ற கைதி ஆவார். தற்போது அவர் கண்காணிப்புக் காலத்தில் உள்னர். கிளார்க் கவுன்டி மாவட்ட கோர்ட்டில் அவர் மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது தனது கண்காணிப்புக் காலத்தை ரத்து செய்யுமாறு ரெட்டன் நீதிபதி மேரி கே ஹோல்தஸிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அதை நீதிபதி மேரி நிராகரித்தார்.


இதனால் கோபமடைந்த ரெட்டன், வேகமாக நீதிபதி  இருக்கையை நோக்கி ஓடினார். பின்னர் சினிமாவில் ஸ்டண்ட்மேன்கள் செய்வது போல டைவ் அடித்து நீதிபதி மீது பாய்ந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி வேகமாக குணிந்து கொண்டார். நீதிபதியைக் காப்பதற்காக ஒரு காவலர் வேகமாக ஓடி வந்தார். டைவ் அடித்துப் பாய்ந்த ரெட்டன், அந்தக் காவலர் மீது போய் விழுந்தார்.




மேலும் பல காவலர்கள் விரைந்து வந்து ரெட்டனை மடக்கிப் பிடித்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டே ஆடிப் போய் விட்டது.. அபாய மணியும் ஒலிக்க விடப்பட்டது.  கோர்ட் வளாகமே அந்த கோர்ட் அறைக்குள் கூடி விட்டது.


தாக்குதலில் ஈடுபட்ட ரெட்டனை கடுமையாக போராடிய பின்னரே காவலர்களால் அடக்க முடிந்தது.  காவலர்கள் அவரைப் பிடித்து மடக்கியும் கடும் கோபத்துடன் அப்போதும் காணப்பட்டார். தன்னைப் பிடித்த காவலர்களையும் அவர் தாக்கினார். கீழே விழுந்து உயிர் தப்பிய பெண் நீதிபதி பின்னர் எழுந்து கொண்டார். அவருக்குப் பெரிய அளவில் காயம் இல்லை. தற்போது ரெட்டன் மீது இந்தத் தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கும் பதிவாகியுள்ளது.