Indians vs Maldives.. பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து.. 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்த மாலத்தீவுகளைச் சேர்ந்த 3 அமைச்சர்களை அந்த நாட்டு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்குச் சென்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியிருந்தன. அதில் ஆழ்கடல் பயணத்தையும் லைப் ஜாக்கெட் அணிந்து பிரதமர் மோடி மேற்கொண்டிருந்தார். கடற்கரையில் அமர்ந்திருப்பது, நடப்பது உள்ளிட்ட புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் பிரதமரின் இந்த பயணம் குறித்து மாலத்தீவு நாட்டு அமைச்சர்கள் 3 பேர் அவதூறான முறையில் கருத்து தெரிவித்திருந்தனர். அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மல்ஷா, ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் குறித்து கிண்டலாக பேசியிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாலத்தீவு அமைச்சர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. மாலத்தீவுகளைப் புறக்கணிப்போம் என்று கூறி சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் பலர் குதித்தனர். பல இந்தியர்கள் மாலத்தீவுகளுக்கு செல்லவிருந்த சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்ய ஆரம்பித்தனர்.
கடந்த வாரம் மாலத்தீவில் தனது குடும்பத்தினருடன் செலவிட்டுவிட்டு தாயகம் திரும்பிய நடிகர் அக்ஷய் குமாரும், கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். கிரிக்கெட் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், பாஜகவினர் என பல்வேறு தரப்பினரும் மாலத்தீவைப் புறக்கணிப்போம், லட்சத்தீவு செல்வோம் என்று முழங்க ஆரம்பித்தனர்.
இந்தியாவிலிருந்துதான் மாலத்தீவுகளுக்கு அதிக அளவிலான பேர் சுற்றுலா வருகின்றனர் என்பதால் இந்த திடீர் நடவடிக்கையால் மாலத்தீவு அரசு சற்று மிரண்டு போனது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய 3 அமைச்சர்களையும் அந்த நாட்டு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் சொன்னது தனிப்பட்ட கருத்து, மாலத்தீவு அரசின் கருத்து அல்ல என்றும் அந்த நாட்டு அரசு விளக்கியுள்ளது.