துருக்கி -சிரியா நிலநடுக்கம்.. முற்றிலும் நாசமான 3 பழமையான நகரங்கள்!

Su.tha Arivalagan
Feb 10, 2023,11:11 AM IST
டெல்லி: துருக்கி -சிரியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில்,  3 பழமையான, வரலாற்று தொன்மையான நகரங்கள் முழுமையாக சேதமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அன்டக்யா, சன்லிஉர்பா, அலெப்போ ஆகிய நகரங்கள்தான் அவை.  வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்டக்யா அல்லது அன்டியோச் நகரில் 2.5 லட்சம் பேர் வசித்து வந்தனர். இது தென் மத்திய துருக்கியில் உள்ளது. இந்த நகரின் முக்கால்வாசிப் பகுதி மண்ணோடு புதைந்து விட்டது. ஒரு வீடுகூட தப்பவில்லை. ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் முக்கிய நகரமாக இது விளங்கியுள்ளது.

கி.மு 300வது ஆண்டில் மாவீரன் அலெக்சாண்டரால் நிர்மானிக்கப்பட்ட நகரம் இது. ரோமானியர்கள், ஹெலனிஸ்டுகள், பைசான்தின், ஓட்டமான் ஆகிய வம்சங்கள் இதை ஆண்டுள்ளன. முதல்  உலகப் போருக்குப் பின்னர் சிரியாவை பிரெஞ்சுப் படையினர் பிடித்தபோது இந்த நகரமும் அவர்கள் வசம் வந்தது. அதன் பின்னர் 1939ம் ஆண்டு துருக்கி வசம் இது போனது.

இந்த நகரம் துருக்கி -சிரியா எல்லையில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொலைவு வெறும் 20 கிலோமீட்டர் தான்.

அன்டக்யா நகரில் மிகவும் பழமையான யூத சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மிகப் பெரிய யூத கோவிலும் (சினகாக்) உள்ளது. அது தற்போது பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.  இங்கு வசித்து வந்த பல யூதர்களும் உயிரிழந்து விட்டனர். தொடர்ந்து இந்த நகரில் வசிக்க முடியுமா என்ற கவலையில் மக்கள் உள்ளனர். 2500 ஆண்டு கால பந்தம் முடியப் போகிறது என்று துருக்கி யூதர் சமுதாய சங்கத் தலைவர் இஷாக் இப்ராஹிம்ஸேட் கூறியுள்ளார்.

சன்லிஉர்பா

சன்லிஉர்பா, கோபெக்லி டபே எனப்படும் குன்றின் மீது அமைந்துள்ள நகரமாகும். உலகின் மிகப் பழமையான மெகாலித்திக் கட்டடங்கள் நிறைந்த நகரமாகும். யுனெஸ்கோவால் பாரம்பரிய நகரமாக  அறிவிக்கப்பட்டதும் கூட. தென் கிழக்கு அன்டோலியாவில் இது உள்ளது.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்படுவதற்கு முன்பாகவே அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு டி வடிவ தூண்களையும் அவர்கள் வடிவமைத்துள்ளனர். அவற்றில் பல தற்போது சேதமடைந்துள்ளது. 

எலிசா என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. நவீன சிரியா கலாச்சார நகரமாக இது விளங்கி வந்தது. 1995ம் ஆண்டு இந்த நகரில் உள்ள தேவாலயத்தில் தஞ்சமடைந்த 3000 ஆர்மீனியர்கள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டனர். தென் கிழக்கு துருக்கியின் மிகவும் பழமையான நகரம் மட்டுமல்லாமல், ஏழ்மையான நகரமும் கூட. சிரியாவுடன் நடந்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரில் உள்ள பாதிப் பேர் அகதிகள்தான்.

அலெப்போ

அலெப்போ உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.  ஈராக்குக்கு அருகில் உள்ள நகரம். பல்வேறு போர்களைப் பார்த்த நகரம் இது என்பதால் இந்த நகரில் போரின் வடுக்கள் சற்று ஆழமாகவே இருக்கும். சிரியாவின் 2வது பெரிய நகரம் அலெப்போ. 2012 முதல் 2016 வரை நடந்த உள்நாட்டுப் போரில் சிக்கி இந்த நகரம் பெரும் சீரழிவை சந்தித்திருந்தது. தற்போது நிலநடுக்கத்தில் மிகப் பெரிய பேரழிவை இது சந்தித்துள்ளது.

2015ம் ஆண்டு இங்கு நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 13வது நூற்றாண்டு அரண்மனை ஒன்று பேரும் சேதமடைந்தது. 2012ல்  நடந்த மிகப் பெரிய தீவிபத்தில்இந்த நகரில் உள்ள பழமையான கடைகள் அடங்கிய அங்காடி  முற்றிலும் சேதமடைந்தது. 2013ம் ஆண்டு மிகப் பழமையான ஓமையாடஸ் மசூதி தீயில் எரிந்து சாம்பலானது.

இந்த மசூதியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் புதுப்பித்து திறந்தார்கள். தற்போது நிலநடுக்கம் வந்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டது.