அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில்.. நாளை தொடங்கி.. 3 நாட்கள் விறுவிறு ஜல்லிக்கட்டு!

Meenakshi
Feb 10, 2025,07:27 PM IST

மதுரை: மதுரை கீழக்கரையில் (அலங்காநல்லூர்) உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் வரும் 11,12 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசு சார்பில் நடைபெற உள்ளது.


வீரத்திற்கு பெயர் போன விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். அந்த ஜல்லிக்கட்டிற்கும் மதுரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதன் பிரதிபலிப்பு தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  தமிழக மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது. இத்தகைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.


இதனையடுத்து, தமிழக அரசின் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு என்று மதுரை அலங்கநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்  என்று ஜல்லிக்கட்டு போட்டிக்காக அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரங்கம் சுமார் 61 கோடியே 78 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஜல்லிக்கட்டு அரங்கம், கால்நடை மருந்தகம், ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம், அருங்காட்சியகம், சிறு நூலகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதனை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றே அந்த அரங்கில் ஏறுதழுவுதல் போட்டியும் நடத்தப்பட்டது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு முதல் பரிசாக ஜீப் வழங்கப்பட்டது.




அந்த வகையில் மதுரையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், மதுரை அலங்கநல்லூர் கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 11,12 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்