திடீரென ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில்.. சிக்கி மாயமான 23 ராணுவ வீரர்கள்!

Su.tha Arivalagan
Oct 04, 2023,11:27 AM IST
கேங்டாக்: வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. லச்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் நீரின்வரத்து  அபாயகரமான அளவில் அதிகரித்தது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக மழையின் காரணமாக இப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 2 ராணுவ வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதில் 23 ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான  ராணுவ வீரர்களை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

சிக்கிமில் பெய்து வரும் கனமழை எதிரொலியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் இன்னும் மூன்று ,நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.