அமெரிக்காவில் பயங்கரம்.. மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 22 பேர் பலி

Su.tha Arivalagan
Oct 26, 2023,11:42 AM IST

லெவிஸ்டன் நகரம், மெய்ன்: அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் என்ற நகரில் இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.


கொலையாளி இன்னும் பிடிபடாமல் சுற்றி வருவதால் மக்கள் வீடுகள விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். 


40 வயதான ராபர்ட் கார்ட்  என்பவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கார்ட் கையில் துப்பாக்கியுடன் திரிவதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு போலீஸார் எச்சரித்துள்ளனர்.




ஒரு பவுலிங் விளையாட்டு மையம், மது பார்,  வால்மார்ட் கடை ஆகியவற்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தானியங்கித் துப்பாக்கியுடன் புகுந்த ராபர்ட் கார்ட் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளார்.  சம்பவம் நடந்த பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மக்கள் வெளியில் வருவதும் நின்றுள்ளது. 


இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கண்டனமும் வெளியிட்டுள்ளார். கொலையாளியை விரைவில் பிடிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மிக மிக சகஜமானவை. ஆனால் இதுபோல பெரிய அளவிலான உயிரிழப்புகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு மே  மாதம் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு நடக்கும் மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுதான்.