கார் கழுவியது குற்றம்.. கட்டுங்க அபராதத்தை.. 22 குடும்பங்களுக்கு ஃபைன்.. பெங்களூரில் களேபரம்!

Su.tha Arivalagan
Mar 25, 2024,03:15 PM IST

பெங்களூரு:  பெங்களூரில் கார் கழுவியது, தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சியது தொடர்பாக 22 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 1.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டு அது வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூர் மாநகராட்சி, பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் உள்ளிட்டவை விதித்துள்ளன.




குறிப்பாக கார்களை கழுவுவது போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி குடிநீரை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தியது, கார்களை கழுவுதல் போன்ற அத்தியாவசியம் அற்ற பணிகளுக்கு பயன்படுத்தியதாக 22 குடும்பங்களுக்கு பெங்களூர் குடிநீர் வாரியம் தலா ரூபாய் 5000 அபராதம் விதித்து உள்ளது. இவர்களிடமிருந்து மொத்தம் ₹ 1.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெங்களூர் மாநகரம் சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வறட்சி நிலவுவதாலும் பெங்களூருக்கான குடிநீர் வினியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் வீடுகளில், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைவருமே குடிநீருக்கும். பிற பயன்பாட்டுக்கான நீருக்கும் கடும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளன.


இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் தங்களது குடியிருப்புகளில் வசிப்போருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. குடிநீரை எப்படி எல்லாம் சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடிநீரை தேவையில்லாத வேலைகளுக்கு பயன்படுத்தியதாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் அளிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.