20வது நெக்சஸ் பிசினஸ் இன்குபேட்டர் கூட்டமைப்பிற்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது.. அமெரிக்கத் தூதரகம்
சென்னை: டெல்லியில் உள்ள அமெரிக்கன் சென்டரில் 2025ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடத்தப்படும் பிரதான பிசினஸ் இன்குபேட்டரான நெக்சஸ், 20வது கூட்டமைப்பிற்கான விண்ணப்பங்களை தற்போது ஏற்றுக்கொள்கிறது என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
நெக்சஸ் கோஹார்ட் திட்டம், 15-இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, அவர்களது மதிப்பீட்டு முன்மொழிவுகளை மேம்படுத்தவும், அவர்களது இலக்கு சந்தைகளை வரையறுக்கவும், தயாரிப்பு/தொழில்நுட்பம் குறித்த சந்தைப் பின்னூட்டங்களைப் பெறவும், தங்கள் நிறுவனங்களை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான மைல்கற்களை உருவாக்கவும் இந்திய மற்றும் அமெரிக்க நிபுணர்களிடம் இருந்து சிறப்புப் பயிற்சியைப் பெறுவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்குகிறது. இந்த நவீன கூட்டமைப்பில் தொடக்க முயற்சிகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் தொழில்முனைவோரிடையே மனம் சார்ந்த ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்படும்.
தொடக்கத்திலுள்ள ஒன்பது வார பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து நான்கு நிறுவனங்கள் வரை மேலும் ஆழமான துணையாதாரம் வழங்குவதற்காக நெக்சஸ்-இல் நீடிக்க வாய்ப்பளிக்கப்படும். இந்நிறுவனங்களுக்கு மேலும் எட்டு மாதங்கள் வரை இன்குபேட்டர் மற்றும் நெட்வொர்க்வசதிகள் வழங்கப்படும். இச்சமயத்தில், நெக்சஸ் நிபுணர்கள் குழு அவர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களது தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டு வரவும், வாடிக்கையாளர் மற்றும் வருவாய்த் தளங்களை வளர்க்கவும், பொருத்தமாக அமையும் பட்சத்தில், அவர்களது செயல்பாடுகளை விஸ்தரிப்பதற்கான நிதியைப் பெறவும் உதவுவதன் மூலம் அந்நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பங்களை www.startupnexus.in இணையதளத்தில் ஜனவரி 5, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு ஜனவரி 17, 2025-க்குள் தெரிவிக்கப்படும்.
நெக்சஸ்-இன் 20வது கூட்டமைப்பிற்கான பயிற்சியை வழங்க, அமெரிக்கத் தூதரகம் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் (யூ-கான்) உள்ள உலகளாவிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (GTDI) இணைந்துள்ளது. புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் மானியத்தின் மூலம் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது. யூ-கான்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் உள்ள டைகிள் (Daigle) லேப்ஸுடன் இணைந்து GTDI, இந்தியா முழுவதிலும் உள்ள பங்கேற்பாளர்களுக்கு புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்முயற்சிகளின் வளர்ச்சியை ஆராய்வதற்கான பார்வைகளையும் முக்கியக் கருவிகளையும் வழங்குகிறது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் அதே வேளையில் நிலையான சமூக மேம்பாட்டிற்குப் பங்காற்றுவதே கூட்டாண்மையின் நோக்கமாகும்.
2017-ஆம் ஆண்டு முதல் குழு தொடங்கப்பட்டதில் இருந்து, 230 இந்திய தொழில்முனைவோர் மற்றும் 19 கூட்டமைப்புகள் நெக்சஸ்-இல் தேறியுள்ளனர், மேலும் கூட்டாக $90 மில்லியன் டாலர்களை வெளிமுக நிதித் திரட்டலில் தொழில்முனைவோர் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்