கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

Manjula Devi
Apr 02, 2025,06:24 PM IST

சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.


பொதுவாக கோடை காலம் துவங்கி விட்டாலே மக்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டுகளுக்குச் சென்று பொழுதுகளைக் கழிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பஸ், ரயில் போன்ற சேவைகளைத் தவிர நீண்ட நாள் திட்டத்திற்கு விமான சேவைகளையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.




அதன்படி சென்னை விமான நிலையத்தில் தினசரி 50 ஆயிரம் பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


இதன் காரணமாக கோடை விடுமுறையை ஒட்டி பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க சென்னை விமான நிலையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது பயணிகளின் வசதிக்காக கோடை காலம் முழுவதும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.