ஆஸ்கர் போட்டியில் இடம் பெறத் தவறியது..  இந்தியாவின் "2018: Everyone is a Hero"

Su.tha Arivalagan
Dec 22, 2023,03:03 PM IST

டெல்லி: இந்தியாவின் சார்பில் 96வது ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்க அனுப்பப்பட்ட மலையாளப் படம் 2018: Everyone is a Hero இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.


மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய படம்தான் 2018: Everyone is a Hero. இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக அனுப்பி வைக்கப்பட்டது.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது இந்தப் படம் கடைசி 15 படங்களின்  பட்டியலில் இடம் பிடிக்கத் தவறியுள்ளது. இதனால் சிறந்த படத்துக்கான போட்டியிலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது.




டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த படம்தான் 2018. கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. 2018ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்தது ரூ. 200 கோடியை வசூலித்து மலையாளத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. மலையாளத் திரையுலகில் அதிக அளவில் வசூலித்த படமாகவும் இது உயர்ந்தது. 


கடந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் அதாவது 95வது ஆஸ்கர் விழாவில் இந்தியாவில் தயாரித்து வெளியிடப்பட்ட ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பர்ஸ் படங்கள் நேரடியாக தயாரிப்பாளர்களால் விருதுக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவின் சார்பில் செல்லோ ஷோ என்ற குஜராத்தி மொழிப் படம் அனுப்பி வைக்கப்பட்டது.


இதில் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபன்ட் விஸ்பர்ஸ் படங்களுக்கு விருது கிடைத்தது. செல்லோ ஷோவுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.


ஆஸ்கர் விருதுகளில் இறுதி 5 படங்களில் கடைசியாக 2001ம் ஆண்டுதான் இந்தியப் படம் இடம் பெற்றது. அது ஆமிர்கான் நடித்த லகான். அப்படம் விருது வெல்லத் தவறியது என்பது நினைவிருக்கலாம்.


96வது ஆஸ்கர் விருதுகள் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெறும்.