சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம்!
Mar 24, 2023,09:27 AM IST
டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் அடிப்படையில் அவரது எம்பி., பதவி பறிபோகி உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி பேசும்போது, மோடி என்று பெயர் வைத்துள்ளவர்கள் திருடர்களாக இருப்பது ஆச்சரியமானது என்று கமெண்ட் அடித்திருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி என்பவர் சூரத் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில் மோடி என்பது துணைப் பெயர் அல்ல. அது ஒரு சமூகத்தின் பெயர். அப்படிப்பட்ட சமூகத்தின் பெயரை தவறாக சித்தரித்து அந்த சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார் ராகுல்காந்தி என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட் நேற்று ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டு சிறைத் தண்டனையையும் அளித்தது.
நாடு முழுவதும் இந்த தீர்ப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நீதித்துறை கடும் கட்டுப்பாடு, அழுத்தத்திற்கு மத்தியில் செயல்படுவது இந்த தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி வாயை அடைக்க பல்வேறு வழிகளிலும் பாஜக முயல்கிறது. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதற்கெல்லாம் ராகுல் காந்தி பயப்பட மாட்டார். தொடர்ந்து அவர் உண்மையையே பேசுவார். இந்த தீர்ப்பை சட்ட ரீதியாக நாங்கள் சந்திப்போம் என்றும் காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பின் காரணமாக ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிபோகி உள்ளது. காரணம், ஒரு எம்பிக்கு கிரிமினல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு சிறைத் தண்டனை பெற்றால் உடனடியாக அவரது பதவியை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் லோக்சபா செயலகத்திற்கு உண்டாம். அந்த வகையில் லோக்சபா செயலகம், ராகுல் காந்தியையும் தகுதி நீக்கம் செய்துள்ளது.
ராகுல் காந்திக்கு அப்பீல் செய்ய 30 நாள் அவகாசம் கொடுத்து தண்டனையை சூரத் கோர்ட் நிறுத்தி வைத்திருப்பதால் லோக்சபா செயலகம் இப்போது இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சொல்லப்பட்டது. அதேசமயம், உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் அப்பீல் ஏற்கப்பட்டு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால் ராகுல் காந்தி பதவிக்கு ஆபத்தில்லை என்றும் பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்போது ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக லோக்சபாசெயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஹின்டன்பர்க் - அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி தீவிரமாக உள்ளார். இந்த விவகாரம் வெடித்தபோது அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் அவர் பேசியது தொடர்பாக அவரது பதவியை பறிக்க பாஜக கோரிக்கை விடுத்தது.
சமீபத்தில் டெல்லி போலீஸ் திடீரென ராகுல் காந்தி வீட்டுக்கு விசாரணைக்காக போய் நின்று பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ராகுல் காந்தியை குறி வைத்து தொடர்ந்து பாஜக வேகம் காட்டி வரும் நிலையில் சூரத் கோர்ட்டின் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கு மிகப் பெரிய அளவில் அனுதாபத்தைத் தேடித் தரும் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது தகுதிநீக்கம் செய்து, ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளதால் இது பாஜக.விற்கு எதிராக மாற வாய்ப்புள்ளது.