ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி குழப்பம்.. காத்திருப்போர் பட்டியலில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்

Su.tha Arivalagan
Sep 12, 2023,05:08 PM IST
சென்னை: சென்னை அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக போலீஸ் விசாரணைநடந்து வரும் நிலையில் இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள தனியார் இடத்தில் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரிலான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் டிக்கெட் விற்கப்பட்டதால் பெருமளவில் ரசிகர்கள் குவிந்து விட்டனர். ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெரும் பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.



அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பலருக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டு பாதிப்படைந்தனர். பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தனியார் நிறுவனம்தான் போதிய வசதிகள் செய்து தராமல் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜுக்கு டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் தற்போது 2 பெண் காவல்துறை உயர் அதிகாரிகள் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல், பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் ஆகியோர்  கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.