2 நிமிடம் அதிர்ந்த டெல்லி.. ஆப்கானிஸ்தான் பூகம்பத்தின் பின்விளைவு!

Su.tha Arivalagan
Mar 22, 2023,09:46 AM IST

டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, டெல்லியில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. 2 நிமிடம் நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். இருப்பினும் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.


நிலஅதிர்வைத் தொடர்ந்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர். வீட்டுக்குள் பொருட்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன.


டெல்லி மட்டுமல்லாமல், வட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்று பதிவானது. இதன் விளைவாகவே டெல்லியிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.




ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் சாதாரணமானவை. குறிப்பாக இந்துகுஷ் மலைப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இது ஈரோசியா மற்றும் இந்திய டெக்டானிக் தட்டுக்கள் சந்திக்கும் இடமாகும் என்பதால் நிலநடுக்கங்கள் சகஜம்.


பாகிஸ்தானிலும் பல்வேறு நகரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி நில அதிர்வுகள் 2 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.