வீட்டை விட்டு ஓடிய இரண்டு மாணவர்கள்.. ஏன் எதற்காக..?

Su.tha Arivalagan
Sep 12, 2023,12:45 PM IST

பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த 2 மாணவர்கள் வீட்டை விட்டு ஓடி விட்டனர். என்ன காரணம் என்று கேட்டால் அதிர்ச்சி ஆகி விடுவீர்கள். கோவாவில் வைத்து இவர்களை போலீஸார் மீட்டுள்ளனர்.


ஒரு சாதாரண ஐபோன் வாங்கிக் கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இவர்கள்  வீட்டை விட்டு ஓடி விட்டனர் என்பதுதான் வேதனையானது.


பெங்களூரில் உள்ள நாகஷெட்டிஹள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகன் உள்ளார். அந்த சிறுவன் பூபந்தாராவில் உள்ள மதராசா பள்ளியில் படித்து வருகிறான். அவனுடன் ஹெப்பால் பகுதியைச்  சேர்ந்த 15 வயது மற்றொரு சிறுவனும் படித்து வருகிறான். பள்ளிக்குச் சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை . மாணவர்களுடைய  பெற்றோர்கள் சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 


மாணவர்களின் பெற்றோர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் விவரம் தெரிய வந்தது. அதாவது இரு மாணவர்களும் தங்களது பெற்றோர்களிடம் ஐபோன் கேட்டுள்ளனர். ஆனால் இப்போது உள்ள போனே போதுமானது, ஐபோன் பிறகு பார்க்கலாம் என்று கூறி விட்டனர் பெற்றோர். நீங்க வாங்கிக் கொடுக்காட்டி என்ன, நாங்களே மும்பைக்குப் போய் வேலை பார்த்து வாங்கிக்கிறோம் என்று இரு மாணவர்களும் கூறினராம்.


இதை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விவரம் போலீஸாருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களின் செல்போன் நம்பரை டிராக் செய்தனர் போலீஸார். ரயில் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பெங்களூரில் இருந்து கோவா சென்ற ரயிலில் மாணவர்கள் ஏறி சென்ற காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது. அங்கிருந்து மும்பைக்கு செல்ல அவர்கள் முயலலாம் என்றும் போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்து கோவா காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு மாணவர்களும் சிக்கினர்.


இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இப்படி சின்ன சின்ன விஷயத்திற்கு வீட்டை விட்டு ஓடலாமா... ஏன் இவ்வாறு செய்கிறார்கள்... இதற்கு காரணம் என்ன... பெற்றோர்களாகிய நாம் தான். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எது சரி எது தவறு என்பதை எடுத்துக் கூறி வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மனதை பக்குவப்படுத்த வேண்டும். சினிமா ,

ஊடகங்கள் ,விளையாட்டு சாதனங்கள் இவை எல்லாம் பொழுதுபோக்கிற்கு மட்டுமே. இதுவே வாழ்க்கை என்றாகி விடாது. அற்பத்தானமான விஷயங்களுக்காக இப்படி வீட்டை விட்டு ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அளவுக்கு குழந்தைகளை விட்டு விடக் கூடாது. 


குழந்தைகளை உரிய முறையில் வழி நடத்த வேண்டும். அவர்களிடம் தோழமையுடன் பழக வேண்டும். படிப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர வைக்க  வேண்டும். அவர்களின் போக்கோடு போய் அவர்களை சரி செய்ய முயல வேண்டும். தேவைப்பட்டால் கவுன்சிலிங்கும் கூட கொடுக்கலாம்.  மாணவர்களும், போன் எல்லாம் ஒரு சாதாரண தகவல் தொடர்பு சாதனம் தான் என்பதை உணர வேண்டும். நன்றாக படித்து நல்ல வேலைக்குப் போகும்போது இதை விட மிக நவீனமான போன்களையெல்லாம் வாங்க முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தாலே போதும்.. இப்படியெல்லாம் ஓடிப் போக தோணாது.