2.59 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
Feb 15, 2023,02:19 PM IST
சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 2.59 கோடி பேர் இணைத்துள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புக்களும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புக்களும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புக்களும் உள்ளன. இந்த மின் இணைப்புக்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக மின்சார வாரியம் உத்தரவு வெளியிட்டது. ஆன்லைன் மூலமாகவும், மின் வாரிய அலுவலகம் மூலமாகவும் இணைக்கும் பணிகள் 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது.
இதற்காக மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி கால அவகாசம் பிப்ரவரி 15 ம் தேதியான இன்றுடன் நிறைவடைகிறது. இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மின்சார கட்டணம் செலுத்த முடியாது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நேற்று (பிப்ரவரி 14) மாலை வரை 2.59 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய இணைப்புகளில் 97.07 சதவீதம் ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன் என கேட்டுக் கொண்டுள்ளார்.