1% பெரும் பணக்கார இந்தியர்களின் பிடியில் ... 40% நாடு... அதிர வைக்கும் டேட்டா!

Su.tha Arivalagan
Jan 16, 2023,12:17 PM IST
மும்பை:  இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் எண்ணிக்கை வெறும் 1 சதவீதம்தான். ஆனால் இவர்கள் வசம்தான் நாட்டின் வளத்தின் 40 சதவீதம் இருப்பதாக ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.



இந்தப் பட்டியலில் கடைசி  இடங்களில் இருக்கும் 50 சதவீதம் பேரிடம் வெறும் 3 சதவீத வளம்தான் இருக்கிறது என்ற வேதனைத் தகவலும் இதில் அடங்கியுள்ளது.

டாவோஸில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்த  ஆக்ஸ்பாம்  சர்வதேச அமைப்பு கூறுகையில், இந்தியாவின் டாப் 10 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு தலா 5 சதவீத கூடுதல் வரி விகித்தால், அந்தப்  பணத்தை வைத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் பள்ளிச் செலவை சரி செய்ய முடியும்.

இந்திய கோடீஸ்வரர்களுக்கு ஒரே ஒரு முறை, அவர்களது  மொத்த சொத்துக்கும் 2 சதவீத வரி விகித்தால் ரூ. 40,423 கோடி கிடைக்கும். அதை வைத்து 3 ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஊட்டச்சத்த்து குறைபாடு உடையவர்களுக்கு நல்ல உணவு வழங்க முடியும்.

நாட்டின் டாப் 10 கோடீஸ்வரர்களுக்கு 5 சதவீத வரி விகித்தால் 1.37 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். இது,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

இந்தியாவில் பெண் ஊழியர்களை விட ஆண் ஊழியர்களுக்கே அதிக சம்பளம் தரப்படுகிறது. ஆண்கள் ஒரு ரூபாய் சம்பாதித்தார், அது பெண்களுக்கு 63 பைசாவாக மட்டுமே உள்ளது. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் ஊரகப் பகுதிகளில் இன்னும் குறைவு. அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் வெறும் 55 பைசா மட்டுமே சம்பாதிக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.