ராகுல் தகுதிநீக்கத்தை எதிர்த்து.. 17 கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம்.. காங்கிரஸ் தலைமையில்!
டெல்லி: ராகுல் காந்தி விவகாரத்தில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த போராட்டங்களை நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி தலைமையில் 17 கட்சிகள் தீர்மானித்துள்ளன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் இவை தீர்மானித்துள்ளன.
ராகுல் காந்தி விவகாரத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஒருங்கிணைந்த போராட்டங்களே பலன் தரும் என்பதால் ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து ஒரே குரலில் போராட காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதன் எதிரொலியாக நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பாரத் ரக்ஷா சமிதி, ஆர்எஸ், சிபிஎம், சிபிஐ, ஆம் ஆத்மி கட்சி, மதிமுக, கேசி, திரினமூல் காங்கிரஸ், ஆர்எஸ்பி, ராஷ்டிரிய ஜனதாதளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், சமாஜ்வாடிக் கட்சி, ஜேஎம்எம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சினை அடிப்படையில் தாங்கள் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ராகுல் காந்திக்கு இன்று நேர்ந்தது நாளை தங்களுக்கும் நேரலாம் என்பதால் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பல்வேறு தலைவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை.
ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.