பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்.. 15 மாவட்டங்களுக்கு நாளை.. மழை!

Su.tha Arivalagan
Apr 22, 2023,03:20 PM IST
சென்னை: கடும் வெப்பத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு கூல் செய்தி.. 15 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவே இல்லை. ஆனால் அதற்குள்ளாகவே பல ஊர்களிலும் 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக் கட்டுகிறது. வெளியில் நடமாடவே முடியலைவில்லை. அந்த அளவுக்கு இப்போதே வெயில் கடுமையாக உள்ளது. 



காலையிலேயே வெயில் தனது டூட்டியைத் தொடங்கி விடுவதால், வேலைக்குப் போகும் மக்கள் அக்னிக் குழம்பு.. தீப்பிழம்பு ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தங்களது பணியிடத்தை சென்றடைய முடிகிறது. பகலில் கடும் வெயில் இரவில் புழுக்கம் என்று மக்களுக்கு திரும்பிய பக்கமெல்லாம் வியர்வை முற்றுகையில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 23ம் தேதி கன மழை பெய்யும்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மித மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில்  இன்று பகலில் வெயில் திடீரென குறைந்தது. சில இடங்களில் லேசான தூறல் காணப்பட்டது. பல இடங்களில் பலத்த காற்றும் இடியும் மக்களை மிரட்டியது. திடீரென மாறிய இந்த சூழல் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. திடீர் காற்றும், வெயில் குறைந்ததும், புழுக்கத்தை போக்கியுள்ளது. இருப்பினும் நல்லதொரு மழை பெய்தால் சிறப்பாக இருக்குமே என்று சென்னைவாசிகள் காத்துள்ளனர்.