எச்ஐவி ரத்தத்தால் வந்த ஆபத்து.. உ.பி.யில் விபரீதம்.. 14 சிறார்களுக்கு பாதிப்பு!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் முறையாக பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் 14 சிறுவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அஜாக்கிரதை தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசினர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை உள்ளது. அங்கு தற்போது 180க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சிறுவர்களுக்கு ரத்தம் குறைவாக இருந்ததினால் (தலசீமியா) மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது.
அப்போது பரிசோதிக்கப்படாத நிலையில் இருந்த ரத்தத்தை சிறுவர்களுக்கு ஏற்றியதால், ரத்தம் ஏற்றப்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்ஐவி, ஹெபாடிடிஸ் பி, சி உள்ளிட்ட நோய்த்தொற்று பரவியுள்ளது. இதனை பரிசோதனையில் உறுதி செய்துள்ளனர் மருத்துவர்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.