தீபாவளி முடிஞ்சு போச்சு.. சென்னைக்குக் கிளம்பும் மக்கள்.. 12,846 சிறப்பு பஸ்கள் ரெடியா இருக்கு!

Manjula Devi
Nov 02, 2024,11:32 AM IST

சென்னை: தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் சிரமமின்றி சென்னைக்கு திரும்புவதற்காக இன்று முதல் நவம்பர் நான்காம் தேதி வரை மொத்தம் 12 ஆயிரத்து 846 சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக  போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக  தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும்  சொந்த ஊர்களுக்கு மக்கள் சிரமமின்றி பயணிக்க கடந்த 28ஆம் தேதி முதல் தீபாவளி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்காக வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 4,058 என மொத்தம் 10 ஆயிரத்து 787 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொண்டு சுமார் 5.76 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். 




இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. மீண்டும் அவரவர் தங்களின் பணிகளை தொடர சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு புறப்பட தயாராகிவிட்டனர். இந்த சமயத்தில் மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இன்று முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளை விட கூடுதலாக மொத்தம் 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


அதன்படி, சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 3165 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பிற முக்கிய பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு 3,405 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன. மேலும் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன் சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் தவிர சிறப்பு ரயில்களும் தமிழ்நாட்டில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்