சூப்பராக சூடு பிடிக்கிறது வட கிழக்குப் பருவ மழை.. இன்று 8.. நாளை 12 மாவட்டங்களில் கன மழை!
சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று. 8 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும், நவம்பர் 7ம் தேதி 17 மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை வட கிழக்குப் பருவ மழை பற்றாக்குறை மழையாகத்தான் இருந்து வருகிறது. தற்போதுதான் அது மெதுவாக வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கலில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு. அதாவது நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 7ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, தி ண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.