வெளியானது 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 91.17% பேர் தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகளே டாப்!

Meenakshi
May 14, 2024,11:49 AM IST

சென்னை:10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று  11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் மட்டும் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு 3,302 மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,26,821 மாணவிகளும் 3,84,351 மாணவர்களும் அடங்குவர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாகின. 




தமிழகத்தில் மட்டும் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், மாணவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு  அனுப்பப்படும் என்றும், மேலும் இணையதளங்களில்  பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்  96.02 சதவீதம் பெற்று முதல் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 95.56 சதவீதம் பெற்று 2ம் இடத்திலும், திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று 3ம் இடத்திலும் உள்ளன.


11ம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 85.75 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 92.36 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. வழக்கம் போல இந்த தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.