அமித் ஷா நிகழ்ச்சியில் கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்த மக்கள்.. ஹீட்வேவ் தாக்கி 11 பேர் பலி!

Su.tha Arivalagan
Apr 17, 2023,11:27 AM IST
நவி மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவுக்காக அழைத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கொளுத்தும் வெயிலில் அமர வைக்கப்பட்டனர். இதில் வெயில் தாங்க முடியாமல் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் வெயிலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நவி மும்பை பகுதியில் மகாராஷ்டிர பூஷன் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சமூக சேவகர் அப்பாசாஹேப் தர்மாதிகாரி என்பவருக்கு விருது அளித்துக் கெளரவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அனைவரும் திறந்த வெளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். வெயில் கொளுத்திய நிலையில் வேறு வழியில்லாமல் அத்தனை பேரும் வெயிலிலேயே அமர்ந்திருந்தனர். இதில் ஹீட் வேவ் தாக்கி பலரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 11 பேர் உயிரிழந்து விட்டனர்.

விருது வழங்கும் விழா நேற்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. முற்றிலும் வெயிலிலேயே அமரும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.  சம்பந்தப்பட்ட மைதானத்தில் மேற்கூரை போடாமல் திறந்த வெளியில் மக்களை அமர வைத்தது தற்போது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

பொதுமக்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவோர் வெயிலையும் மனதில் கொண்டு முறையான ஏற்பாடுகளைச் செய்து நடத்த வேண்டும் .. மக்கள் பாவம் இல்லையா!