திருச்சியில் BS6 வகையைச் சேர்ந்த 10 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்
திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு BS6 வகையைச் சேர்ந்த 10 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி துவக்கி வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (20.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்து இயக்க சேவையினை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்துக்கழக பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ரூபாய் 634.99 கோடி மதிப்பில் 1666 பிஎஸ்6 ரக பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை திட்டமிட்டது. அதன் முதற்கட்டமாக ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய பிஎஸ்6 ரக பேருந்துகள் இயக்கத்தை கடந்த ஜனவரியில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் படி திருச்சி மாவட்டத்திற்கு இன்று பிஎஸ் 6 நவீன வசதிகளுடன் கூடிய பஸ் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.