சத்தமில்லாமல் ராஜ்யசபாவில் பலத்தை அதிகரிக்கும் பாஜக!
Jul 18, 2023,09:51 AM IST
டெல்லி : 3 மாநிலங்களில் காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் 6 திரினமூல் மற்றும் 5 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆள் ஆளுக்கு 2024 ம் ஆண்டு நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கவனம் முழுவதும் லோக்சபா தேர்தல் பற்றியும், கூட்டணியில் தங்களுக்கு தான் பலம் அதிகம் என்பதை நிரூபிப்பதிலும் தான் உள்ளது. ராஜ்யசபா ஒன்று இருப்பதையே அவர்கள் மறந்து விட்டார்கள் போல.
ஆனால் பாஜக.,வோ சத்தமே இல்லாமல் ராஜ்யசபாவில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது. லோக்சபாவில் புதிதாக எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் ராஜ்யசபாவிலும் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அந்த சட்ட மசோதா, சட்டமாக நிறைவேற்றப்படும். இதை மனதில் கொண்டு சரியாக கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது பாஜக.
ராஜ்யசபாவில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமை, அதாவது ஜூலை 24 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 6, குஜராத்தில் 3, கோவாவில் 1 இடத்திற்கும் தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இந்த தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு ஏதும் நடத்தப்பட போவதில்லை. காரணம் இந்த 11 இடங்களுக்கும் அறிவித்துள்ள வேட்பாளர்கள் போட்டியின்றி, ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை இடங்களில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் வெறும் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் போதிய எம்எல்ஏ.,க்களின் பலம் இல்லாததால் ராஜ்ய சபா தேர்தலில் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்த போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்து விட்டது.
இதனால் ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகேந்து சேகர் ராவ், தோலா சென், சகித் கோகலே, சமிருல் இஸ்லாம், பிரகாஷ் பரிக் உள்ளிட்டோரும் அடங்குவர்.